Wednesday, July 25, 2012

What is Higgs Boson?


(Thanks to Mr. Badhri Sheshadri for his wonderful article in Tamil on Higgs boson. With due respect and acknowledgment we are presenting the article here.)

இந்த உலகம் எப்படி உருவானது? நம்மைச் சுற்றியுள்ள கோள்களும் நட்சத்திரங்களும் எப்படிப் பிறந்தன? இந்தப் பிரபஞ்சம் உருவானது எப்படி?நீண்டகாலமாக அறிவியல் இந்தக் கேள்விக்கு விடைகாண முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இதற்கான விடைகள் அவ்வப்போது கீற்றுப் போலத் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றாலும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி நமக்கு இன்னமும் ஏகப்பட்ட விடை தெரியாத கேள்விகள் உள்ளன. ஒரு பெருவெடிப்பு என்பதன் மூலமாகத்தான் இப்போதைய பிரபஞ்சம் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தைக் கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தைப் பற்றி அறிவியல்ரீதியாக ஒன்றையும் சொல்லமுடியாத நிலையில் இப்போதும் இருக்கிறோம். ஆனால்-

அந்தக் கணத்துக்குச் சில விநாடிகள் கழித்து, பிரபஞ்ச வெளியில் எக்கச்சக்கமாக வெப்பத்தின் ஆற்றல் மட்டுமே விரவி இருந்திருக்கும். அங்கிருந்து எப்படி இத்தனைத் துகள்களும், அவற்றிலிருந்து இத்தனை அணுக்களும், அவற்றிலிருந்து இத்தனை தனிமங்களும், இன்று நாம் காணும் அனைத்தும் உருவாகின? முதலில் இந்தத் துகள்களின் அடிப்படைக் குணங்களான நிறையும் மின்னூட்டமும் எப்படித் தோன்றின?மின்னூட்டம் எப்படி வந்திருக்கலாம் என்பதற்கு சில கோட்பாடுகள் உள்ளன. ஆனால் நிறை எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கு ஹிக்ஸ் கோட்பாடு ஒன்றுதான் இப்போதைக்கு அறிவார்ந்ததாக உள்ளது. அது என்ன ஹிக்ஸ் கோட்பாடு?

பெருவெடிப்பை ஒட்டிய தருணத்தில் ஹிக்ஸ் போஸான்கள்என்ற துகள்கள் உருவாகி, பிரபஞ்ச வெளியை முழுமையாக நிறைத்திருக்கவேண்டும். பிற துகள்கள் அடுத்துத் தோன்றியிருக்கவேண்டும். அவை ஹிக்ஸ் புலத்தில் நகர்ந்தபோது ஹிக்ஸ் போஸான்களுடன் ஊடாடி, தமக்கான நிறையைப் பெற்றிருக்கவேண்டும். அதன்பின் இந்தத் துகள்கள் எல்லாம் ஒன்றுகூடி, கொஞ்சம் கொஞ்சமாக அணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து இன்று நாம் காணும் இந்தப் பிரபஞ்சப் பெருவெளி, நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள், தூசுகள் என அனைத்துமே தோன்றியிருக்கவேண்டும். அதாவது பிரபஞ்சத்தின் முதல் துகள் ஹிக்ஸ் போஸான். அதிலிருந்துதான் எல்லாமே உருவாகியிருக்க வேண்டும். ஹிக்ஸ் போஸான் என்றால்?

தமிழ் நாட்டில் இன்று பள்ளிப் பிள்ளைகளுக்குக்கூட அணுவைப் பற்றித் தெரிந்திருக்கும். அணுவின் உள்ளே புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போன்ற அணுத் துகள்கள் இருப்பதாக நாம் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். இந்தத் துகள்களுக்கெல்லாம் அடிப்படையாக இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று நிறை (mass), மற்றொன்று மின்னூட்டம் (charge). நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ஒத்த மின்னூட்டம் உடைய இரு பொருள்கள் ஒன்றை ஒன்று விலக்கும்; எதிரெதிர் மின்னூட்டம் உடைய இரு பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது. இது அடிப்படை விதிகளில் ஒன்று. ஆனால் ஓர் அணுவின் உட்கருவில் ஒரே மின்னூட்டம் கொண்ட பல புரோட்டான்கள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று விலக்கி அல்லவா தள்ளவேண்டும்? ஆனால் அப்படியின்றி ஒன்றை ஒன்று இறுக்கிப் பிடித்தபடி ஒரே உட்கருவில் உள்ளனவே? இது எப்படிச் சாத்தியம்?

விஞ்ஞானிகள் இதனை விரிவாக ஆராய்ந்தனர். புரோட்டான், நியூட்ரான் ஆகியவையே அடிப்படைத் துகள்களாக இல்லாதிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இவற்றுக்கும் அடிப்படையாக குவார்க்குகள் என்ற ஆறு துகள்கள் இருக்கவேண்டும் என்றும் அவற்றின் பல்வேறு கூட்டமைப்பே புரோட்டானாகவும் நியூட்ரானாகவும் ஆகியிருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

இந்தக் குவார்க்குகளுக்கு இடையே மிகவும் வலுவான ஒரு விசை இருக்கவேண்டும் என்ற அவர்கள், இதற்கு வலுவான உட்கரு விசை’ (ஸ்ட்ராங் நியூக்ளியர் ஃபோர்ஸ்) என்று பெயரிட்டனர். இதேபோல வலுவற்ற உட்கரு விசைஎன்ற கருத்தாக்கமும் உருவானது. சில குறிப்பிட்ட கட்டங்களில் ஒரு நியூட்ரான் ஒரு புரோட்டானாக மாறுகிறது. வேறு சில கட்டங்களில் புரோட்டான் ஒன்று எலெக்ட்ரான் ஒன்றைக் கவ்விப் பிடித்து, நியூட்ரானாக உருவெடுக்கிறது. இதுபோன்ற மாற்றங்களுக்குக் காரணம் இந்த வலுவற்ற உட்கரு விசை.

ஆக, நமக்கு ஏற்கெனவே தெரிந்த மின்காந்த விசை, ஈர்ப்பு விசை ஆகியவற்றோடு வலுவற்ற உட்கரு விசை, வலுவான உட்கரு விசை ஆகியவை சேர்ந்து மொத்தம் நான்கு அடிப்படை விசைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் பேசத் தொடங்கினர். இதைத்தான் ஸ்டாண்டர்ட் மாடல் என்று விஞ்ஞானிகள் சொல்லத் தொடங்கினர்.

துகள்கள: இந்த விசைகள் பரவியிருப்பதை விசைப்புலங்கள் என்றும் அந்த விசைப்புலங்களை சில சில துகள்கள் உருவாக்குவதாகவும் சொல்லலாம். உதாரணமாக மின்காந்த விசைப்புலத்தை உருவாக்குவது போட்டான்கள் என்ற ஒளித்துகள்கள்தான் எனலாம். அப்படியானால் வலுவான உட்கரு விசை, வலுவற்ற உட்கரு விசை ஆகியவற்றை உருவாக்குவதிலும் ஏதேனும் துகள்கள் இருக்குமோ? அப்படிப்பட்ட ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது. வலுவான உட்கரு விசையை உருவாக்கக்கூடிய துகள்களுக்கு குளூவான் என்றும் வலுவற்ற உட்கரு விசையை உருவாக்கும் துகள்களுக்கு டபிள்யூ போஸான், இஸட் போஸான் என்றும் பெயர் தரப்பட்டது. இந்தத் துகள்களை ஏன் போஸான் என்று அழைக்கிறார்கள்?

பால் டிராக் என்ற விஞ்ஞானி,  வேறு சில விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஐன்ஸ்டைனின் சார்பியல் விதிகளையும் இணைத்து, எலெக்ட்ரானின் இயக்கத்தை விளக்கும் சமன்பாடுகளை வெளியிட்டார்.அப்போது அவர் இருவிதமான துகள்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. (1) ஒரே குவாண்டம் நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் இருக்கலாம். (2) ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்க முடியாது. குவாண்டம் நிலை என்றால்?

குவாண்டம் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள, ஓர் உதாரணம் உதவும். சென்னையில் இருக்கும் பாம்புப் பண்ணையில் இருளர்கள் பாம்புகளைப் பானையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலவகைப் பாம்புகள் பலவற்றை ஒரே பானையில் ஒன்றாகச் சேர்த்து வைக்கலாம். ஆனால் வேறு சிலவகைப் பாம்புகளை அப்படிச் செய்ய முடியாது. ஒரு பானையில் ஒன்று மட்டும்தான். அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு பாம்பைக்கூட தன்னுடன் இருக்க அது அனுமதிக்காது. பானைதான் குவாண்டம் நிலை; பாம்புதான் துகள். எலெக்ட்ரான்களை எடுத்துக்கொண்டால், இரு வேறு எலெக்ட்ரான்கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்காது. ஆனால் போட்டான் எனப்படும் ஒளித்துகள் பலவும் ஒரே குவாண்டம் நிலையில் இருக்கும்.

இந்த இரண்டுவகைப் பாம்புகளையும் வேவ்வேறு விதமாகக் கையாளவேண்டும் என்பதை டிராக் தெளிவாகப் புரிந்துகொண்டார். அதற்கான கணிதமுறைகளைத் தேடினார். அவருடைய முன்னோடிகள் இதனை ஏற்கெனவே செய்து வைத்திருந்தனர். கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திர நாத் போஸ், ஒளித்துகளான போட்டானின் இயக்கம் பற்றிச் சில கணக்குகளைச் செய்யும்போது புதுவிதமான ஒரு புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் இதனை யாரும் ஏற்கவில்லை. போஸ் சற்றும் மனம் தளராமல் தன் கட்டுரையை ஐன்ஸ்டைனுக்கு அனுப்பிவைத்தார்.

அந்தக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஐன்ஸ்டைன்,  அதை ஜெர்மன் மொழிக்கு மாற்றிப் பதிப்பிக்கச் செய்தார். நிறையற்ற ஒளித்துகளுக்காக போஸ் உருவாக்கிய கணித முறையை ஐன்ஸ்டைன் நிறை கொண்ட பொருள்களுக்கும் நீட்டித்தார். டிராக் இந்தக் கணித முறையை அப்படியே எடுத்துக்கொண்டார். பல துகள்களும் ஒரே குவாண்டம் நிலையில் இருந்தால், அவை போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் முறையில் இயங்கும். எனவே இத்தகைய துகள்களுக்கு  போஸான் என்று பெயர் கொடுத்தார் டிராக்.

ஒரே குவாண்டம் நிலையில் இருக்காத துகள்கள், ஃபெர்மி-டிராக் புள்ளியியல் முறையில் இயங்கும். எனவே இத்தகைய துகள்களை ஃபெர்மியான் என்று அழைத்தார் டிராக் .ஹிக்ஸ் கண்டுபித்த, போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் முறையில் இயங்கும் துகள்தான், ஹிக்ஸ் போஸான்.மாற்றி யோசி. பல்வேறு துகள்கள் இருக்கின்றன என்ற உண்மை இன்னொரு கேள்விக்கு இட்டுச் சென்றது. பல்வேறு துகள்களுக்கும் வெவ்வேறு நிறை எப்படி ஏற்படுகிறது? அவற்றுக்கு உள்ளே என்னதான் புகுந்துகொண்டு ஒன்றை அதிக நிறையுடனும், ஒன்றை மிகக் குறைந்த நிறையுடனும், இன்னொன்றை நிறையே இல்லாமலுமாக ஆக்குகிறது?

1963-ல் ஆறு விஞ்ஞானிகள் இது குறித்து விரிவான கோட்பாடு ஒன்றை முன்வைத்தனர். அந்த ஆறு பேரில் ஒருவர்தான் பீட்டர் ஹிக்ஸ். இவர்கள் முன் வைத்த கோட்பாடு, துகள்களின் நிறை பற்றி நாம் அதுவரை வைத்திருந்த கருத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிப்போட்டது. ஒரு துகளுக்கு உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று அதன் நிறையைத் தருகிறது என்று யோசிப்பதைவிட, ஒரு துகள் ஒரு விசைப்புலத்தில் செல்லும்போது அதன்மீது உருவாகும் வினைதான் அதன் நிறையைத் தருகிறது என்பதாக ஏன் சிந்திக்கக்கூடாது என்றனர் இவர்கள். இவர்கள் முன் வைத்த கருத்துகளின் முக்கிய அம்சங்கள்:

எப்படி வலுவான/வலுவற்ற உட்கரு விசைப்புலங்களை அவற்றுக்கான துகள்கள் உருவாக்குவதாகச் சொல்கிறோமோ, அதேபோல ஹிக்ஸ் புலத்தை ஹிக்ஸ் போஸான் என்ற துகள் உருவாக்குகிறது. எப்படி மின்காந்தப் புலத்தில் மின்னூட்டம் கொண்ட ஒரு துகள் செல்லும்போது அது உருவாக்கும் மாற்றத்திலிருந்து அதற்கு என்ன மின்னூட்டம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமோ...அதே போல ஹிக்ஸ் புலத்தில் ஒரு துகள் செல்லும்போது ஏற்படும் மாற்றத்திலிருந்து ஒரு துகளின் நிறை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இப்படிப் பார்க்கலாம். ஹிக்ஸ் புலத்தில் ஒரு துகள் மிக எளிதாக, வேகமாகச் செல்கிறது என்றால் அதன் நிறை குறைவாக இருக்கவேண்டும். இன்னொரு துகள் சிரமப்பட்டு மெதுவாக நீந்திச் செல்கிறது என்றால் அதன் நிறை அதிகமாக இருக்கவேண்டும்.அதெல்லாம் சரி, உண்மையிலேயே ஹிக்ஸ் போஸான் என்ற துகள் ஒன்று உள்ளதா? அதனைக் கண்டுபிடிக்க முடியுமா?உண்மையிலேயே இருக்கிறதா?

இதற்கு முன்னர் பரிசோதனைச் சாலையில் சில துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல இப்போதும் சில பரிசோதனைகளைச் செய்தால் ஹிக்ஸ் போஸான் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்து விடலாமே?இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ஹிக்ஸ் கோட்பாடு உருவானது 1964-ல். அதற்குப்பின், 1970-களில்தான் வலுவான உட்கரு விசை முன்மொழியப்பட்டது. ஆனால் அதன் விளைவாகச் சிந்திக்கப்பட்ட துகள்கள் எல்லாம் கண்டறியப்பட்டுவிட்டன. ஹிக்ஸ் போஸான் துகள் மட்டும் கண்ணில் படவில்லை.அதற்கு ஒரு காரணம் இருந்தது.இந்தத் துகள்களையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டுமானால் அதிவேகத்தில் செல்லும் இரு அணுத் துகள்களை மோதவிடவேண்டும். அதன் விளைவாக உருவாகும் ஆற்றலில் இந்தத் துகள்கள் உடைந்து, நாம் எதிர்பார்க்கும் சில துகள்கள் கிட்டலாம்.

ஹிக்ஸ் போஸானின் உள்ளார்ந்த ஆற்றல்-நிறை மிக மிக அதிகமானது. பிற துகள்களைக் கண்டுபிடிக்கவேண்டுமானால் இரண்டு எலெக்ட்ரான்களை அல்லது குறைந்த வேகத்தில் செல்லும் இரு புரோட்டான்களை மோதவிட்டால் போதுமானது. ஹிக்ஸ் போஸானைக் கண்டறியவேண்டுமானால் மிக அதிகமான வேகத்தில் இரு புரோட்டான்களை மோதவிட வேண்டியிருக்கும். இதனைச் சாத்தியப்படுத்த நிறையத் தொழில்நுட்ப மேம்பாடு தேவைப்பட்டது. இதன் விளைவாக உருவானதே சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிச் சாலையில் உள்ள லார்ஜ் ஹேட்ரான் கொலைடர் (பெரும் துகள் மோதற்களம்).இந்த மோதற்களத்தில் இரண்டு புரோட்டான்களை அதிவேகத்தில் மோதச் செய்ய முடியும். ஆனால் பல்வேறு தொழில்நுட்ப இடைஞ்சல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களையும் தாண்டி, சென்ற ஆண்டில்தான் லார்ஜ் ஹேட்ரான் கொலைடரில் குறிப்பிட்ட வேகத்தை அடைய முடிந்தது.

அந்தச் சோதனைகளின்போது கிடைத்த தகவல்களை ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இரு விஞ்ஞானிக் குழுக்கள் கடந்த வாரம் (4 ஜூலை 2012) அறிவித்தனர்.கிட்டத்தட்ட என்றால்? இன்னும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதுதான். அதாவது மேலும் சில சோதனைகள் தேவை. ஆனால் இதுவரை அறிந்ததிலிருந்து ஹிக்ஸ் போஸான் போல ஒன்று இருப்பது உறுதி. அதாவது ஹிக்ஸின் கோட்பாடு கிட்டத்தட்ட உறுதி.

ஆனால் இதுவே இறுதி கிடையாது. நாளை மேலும் சில கேள்விகள் எழலாம். அப்போது நாம் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகலாம்.ஆனால் சமீப காலத்தில், அதாவது கடந்த கால் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று சொல்லலாம்.இதன் அடிப்படைகள் 1920-களிலிருந்து உருவானவை. அதில் இந்தியரான சத்யேந்திர நாத் போஸின் கணிதப் பங்களிப்பு அடிப்படையாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

Sunday, May 20, 2012

ஆல்ஃப்ரெட் நோபல்

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.


இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.




1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.


ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.




கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.


மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.




ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.


அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.




ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை




ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.

மைக்கேல் ஃபாரடே

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.

1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.

லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.

முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.

பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.

இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.


மேரி கியூரி


 1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சமவாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7- ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையில் பிறந்தார்  Maria Salomea Skłodowska என்ற மேரி கியூரி. மரியாவின் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். அதனாலயே அவருக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக்காலத்து பெண்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்று அது. ஆனால் தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. ஏழ்மையைப் போக்கவும், கல்வி கட்டனத்திற்காகவும் அவர் பகுதிநேர துணைப்பாட ஆசிரியராக பணியாற்ற வேண்டியிருந்தது.


தனது 24 ஆவது வயதில் மேல் கல்விக்காக பாரிஸுக்கு வந்த அவர் ஸாபான் என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயற்பியலில் மிகச்சிறப்பாக தேர்ச்சிப்பெற்று பட்டமும் பெற்றார். அந்தக்கால கட்டத்தில் அவர் Pierre Curie என்ற இளையரைச் சந்தித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொண்ட மரியா மேரி கியூரி ஆனார். கணவன், மனைவி இருவருமே இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சி செய்ய விரும்பினர். 1897-ல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்ற தனிமத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார் மேரி கியூரி. கணவர் பியரி கியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு தனிமங்களை அவர்கள் ஆராய்ந்தனர். தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

முதலாவது தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்தின் நினைவாக பொலேனியம்என்று பெயரிட்டார் மேரி கியூரி. இரண்டாவது தனிமம்தான் புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் ரேடியம்”. ஆராய்ச்சியில் அளவிட முடியாத ஆர்வம் காட்டிய அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக கல்லூரிகளில் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஒழுங்கான ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூட வசதியில்லை. ஒழுகும் கூரையும், போதிய மின்வசதியும் இல்லாத ஓர் அறைதான் அவர்களுக்கு ஆய்வுக்கூடமாக இருந்தது. அந்த ஆய்வுக்கூடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓர் சக விஞ்ஞானி அது ஒரு மாட்டுத்தொழுவம் போல் இருந்தது என்று கூறினார். குளிர்காலத்தில் 6 டிகிரி வரை தட்ப நிலை குறையும். அந்தச் சூழ்நிலையிலும் அயராது ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் அந்த அறிவியல் தம்பதியர். அவர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய எவரும் முன்வரவில்லை.


ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் வற்புறுத்தியும் அதனைச் செய்ய மறுத்து விட்டனர் அந்தத் தம்பதியினர். அதற்கு என்ன காரணம் தெரியுமா? கதிரியக்கம் பற்றி உலகின் எல்லா விஞ்ஞானிகளும் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புதிய பலன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அதனால் மனுகுலம் நன்மை பெற வேண்டும் என்ற ஒரே காரணம்தான். எதற்குமே உரிமை கொண்டாட விரும்பும் இந்த சுயநல உலகில் இந்த பிரபஞ்சமே நன்மை பெற வேண்டும் என்று சிந்தித்த அந்த அதிசய தம்பதியரை வரலாறு மட்டுமல்ல நாமும் கைகூப்பி வணங்க வேண்டும். ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை கியூரி தெரபிஎன்று அழைத்தனர்.


ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 1906 ஆம் ஆண்டு கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் நலிவுற்றிருந்த பியரி கியூரியை எதிர்பார விதமாக ஒரு குதிரை வண்டி மோதித் தள்ளியதில் அவர் காலமானார். தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், இரண்டு பிள்ளைகளை தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. கணவர் இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி அவர்.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில் அதாவது 1911 ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கி கெளரவித்தது நோபல் குழு. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டு முதலாம் உலகப்போர் மூண்டது. X-கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக்கூடாது என்பதற்காக எக்ஸ்-ரே வாகனத்தை உருவாக்கி சுமார் 150 தாதியர்களுக்கு பயிற்சியும் அளித்தார். ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இன்னும் கண்டறிய வேண்டும் என்று விரும்பிய மேரி கியூரி தனது மகள் ஐரினையும்(Irene) ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமூட்டினார்.


மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால்தான் புற்று நோய்க்கு சிகிச்சை பிறந்தது. ஆனால் எந்த கண்டுபிடிப்பு பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர உதவியதோ அதே கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கைக்கே உலை வைத்ததுதான் மிகப் பெரிய அறிவியல் சோகங்களுள் ஒன்று. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. மனுகுல மேன்மைக்காக பாடுபட்ட அந்த உன்னத விஞ்ஞானியின் உடலை "லுக்கிமீயா" என்ற புற்றுநோய் அரித்தது. கிட்டதட்ட தனது விரல்களையும், கண் பார்வையையும் கதிரியக்கத்திற்கு காவு கொடுத்த நிலையில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67 ஆவது அகவையில் மரணத்தைத் தழுவினார் மேரி கியூரி அம்மையார்.


தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். தாயும், தந்தையும், மகளும் நோபல் பரிசு பெற்றது வரலாற்றில் கியூரி குடும்பத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமையாகும். கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற 'பாந்தியன்' (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. ரேடியம் என்ற அரிய தனிமத்தை வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து பெரும் பணம் சம்பாதிக்க எண்ணியிருக்கக்கூடும். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க எண்ணாத ஓர் உத்தம விஞ்ஞானிதான் மேரி கியூரி அம்மையார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே பரிசாகத் தந்த அந்த அதிசய அம்மையாரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள் எளிதானதுதான்.

முதலாவது பிற்போக்கான சமுதாய எண்ணங்களை உதறித் தள்ளும் தன்னம்பிக்கை, இரண்டாவது வறுமையிலும் பிறர் நலம் நாடும் உயரிய சிந்தனை, மூன்றாவது இன்னல்களை தவிடு பொடியாக்கும் கடின உழைப்பு, நான்காவது சுயநலத்தைத் துறந்து பொதுநலத்திற்காக பாடுபடும் பண்பாடு. இந்த நற்பண்புகளை கடைபிடித்து விடாமுயற்சியோடு போரடியதால்தான் அவர் கனவு கண்டது போலவே அறிவியல் என்ற வானம் வசப்பட்டது. மேரி கியூரி அம்மையாரிடம் இருந்த இந்த நான்கு பண்புகளுமே நமக்கு ஒருசேர இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நான்கில் எதாவது ஒரு பண்பை கடைப்பிடித்து விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)


ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.


சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.


1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.


* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு  "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது...

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! நியூட்டன் பிறவிலேயே ஒரு மேதை அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டறிந்து சொல்ல முடிந்தது. இறவாப்புகழும் பெற்று வானத்தை வசப்படுத்த முடிந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அந்த பிறவி மேதைக்குகூட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். உங்களுக்கும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை தூண்களாக இருந்தால் நிச்சயம் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும்.



பெஞ்சமின் ஃபிராங்கிளின்



ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான சுயசரிதைகளுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், bifocal glasses எனப்படும் வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்ஸ்க்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் ஆகப் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. அவர்தான் தான் வாழ்ந்த 84 ஆண்டுகளும் மனுகுலத்தின் மேன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியும், இலக்கியவாதியும், வர்த்தகரும், அரசியல்வாதியுமான பெஞ்சமின் ஃபிராங்கிளின்.


1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்புக் கடிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தாயரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓறாண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

வாசிப்பை நேசிப்போம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் நம்மில் பலர் புத்தகங்கள் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. ஆனால் ஃபிராங்கிளினுக்கோ இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் புழுவாக படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததாலோ என்னவோ சுவாரசியமாக எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது.


இங்கு ஒரு சுவாரசியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். ஃபிராங்கிளின் பல கட்டுரைகளை தானே எழுதி பெயர் குறிப்பிடாமல் அதிகாலையில் அந்த அச்சுக்கூடத்தின் வாயிலில் வைத்து விடுவாராம். சகோதரரும், நண்பர்களும் அவற்றைப் பாராட்ட ஃபிராங்கிளின் மட்டும் அவை நன்றாக இல்லை அப்படி இருக்குமேயானால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பார் என்று எதிர்த்துக் கூறுவாராம். தன் தம்பி சொல்வதற்கு எதிராகவே முடிவெடுக்கும் பழக்கமுடையவர் அண்ணன் என்பதால் அவற்றையெல்லாம் அழகாக அச்சிட்டு பிராங்கிளினைக் கொண்டே விற்பனை செய்ய சொல்வாராம் ஜேம்ஸ். எவ்வுளவு சாதுர்யம்? பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி Philadelphia வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பத்திரிக்கைகளில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு Pennsylvania Gazette என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard's Almanack என்ற சஞ்சிகையைத் தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த சஞ்சிகைதான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில்கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான bifocal lens அவருடைய கண்டுபிடிப்புதான். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் பாக்கியமாக கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் இன்னும் என்னவெல்லாம் உலகுக்கு தந்திருக்கிறார் தெரியுமா?


நோட்டுப் பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சப்ஸ்கிரிப்சன் (subscription) எனப்படும் சந்தா முறையில் நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் அவர்தான். Philadelphia-வின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான  Pennsylvania பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

ஃபிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி ஃபிரான்ஸின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த ஃபிரான்ஸும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.


சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அப்போது உலக நாடுகள் துக்கத்தில் மூழ்கின. அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அவற்றுள் மிகவும் பிடித்த பொன்மொழி:

"இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்"

ஆம் வரலாற்றில் மிகவும் பயனுள்ள அர்த்தமுள்ள வழியில் செலவழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அமெரிக்கர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒட்டுமொத்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று மாந்தர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அவரைப்போல தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முற்படும் எவருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மையாகும்.