With due acknowledgement to Writer S.RamaKrishnan
பயணம் மனிதர்களுக்கு எதையெல்லாம் கற்றுத்தருகிறது என்பதற்கு சாட்சி போலிருக்கிறது THIRD CLASS TICKET என்ற Heather Wood ன் புத்தகம், தொலைக்காட்சி பிம்பங்களாக உலவும் இந்தியாவைத் தாண்டி, உண்மையான இந்தியாவை அறிந்து கொள்ள முற்படும் ஒவ்வொருவரும் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும
1969ல் ஆண்டு வங்காளத்தின் மிகச்சிறிய கிராமம் ஒன்றினைச் சேர்ந்த 44 பேர் ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றிபார்த்துவருவது என்று ஒரு பயணம் கிளம்பினார்கள், இது புனிதப்பயணமோ, சுற்றுலாவோ கிடையாது, அறிவையும் அனுபவத்தையும் தேடிய யாத்திரை, அவர்கள் அதுவரை தனது சொந்தக் கிராமத்தை தவிர வேறு எந்த ஊரையும் பார்த்தவர்கள் கிடையாது, வாழ்வில் முதல் முறையாக வெளியூர்களுக்குப் பயணம் கிளம்பினார்கள், கல்கத்தாவில் துவங்கி காசி, சாரநாத், லக்னோ, ஹரித்துவார், டெல்லி, ஆக்ரா ஜான்சி, குஜராத், ஆஜ்மீர், ஜெய்பூர், பம்பாய், ஹைதரபாத், மைசூர், ஊட்டி, கோயம்புத்தூர், கொச்சி, கன்யாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், மகாபலிபுரம், பூரி, கொனர்க், டார்ஜிலிங், காங்டாக் மீண்டும் கல்கத்தா என்று நீள்கிறது இப்பயணம்
இந்த மகத்தான ரயில்பயணத்தில் கிராம மக்கள் கண்ட வரலாற்று முக்கிய இடங்கள், ஆறுகள், மலைகள், முக்கிய நகரங்கள், கலை நிகழ்ச்சிகள், அதனால் உருவான அவர்களின் மனநிலை மாற்றங்கள், இந்தியா என்பது எவ்வளவு மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் பண்பாடுகளின் ஒருமித்த சங்கமம் என்பதை உணர்ந்த விதம், உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மாறுதல்கள், நோய்மையுதல், சுய அடையாளஙகளை மறுபரிசீலனை செய்து கொள்வது என்று பயணம் மனிதர்களுக்குள் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதை துல்லியமாக விவரித்திருக்கிறார் ஹீதர் வுட். கிராமவாசிகளின் பயணத்தின் ஊடே தானும் இணைந்த கொண்ட மானுடவியல் ஆய்வாளரான ஹீதர் வுட் 15000 கிலோமீட்டர் தூரம் அவர்களுடன் மூன்றாம் வகுப்பு ரயில்பெட்டியில் பயணம் செய்திருக்கிறார், அவளை வெள்ளைகாரப்பெண் என்று சற்று விலகியவளாக நடத்திய கிராமவாசிகள் பயண முடிவிற்குள் தங்களது சொந்த மகளைப்போல, சகோதரி போல நடத்திய அனுபவத்தை ஹீதர் வுட் உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார்
இதுவரை எழுதப்பட்ட பயணநூல்களில் இருந்து மூன்றாம் வகுப்பு டிக்கெட் முற்றிலும் மாறுபட்டது, இது ஒரு இந்திய கிராமம் ஒட்டுமொத்த இந்தியாவை சுற்றி வந்த சவாலான அனுபவத்தின் அசலான பதிவு, கிராமவாசிகளின் கண்களால் இந்தியாவின் பழமையும் புதுமையும் எப்படி உள்வாங்கிக் கொள்ளபடுகின்றன என்பதன் நேரடி சாட்சியாக உள்ளது. சொந்த ஊர்ப் பற்று, தாய்மொழிப்பற்று, உள்ளுர்சாப்பாடு, உள்ளுர் பழக்க வழக்கம் என்று தன்னைச் சுற்றிய சிறிய வட்டத்திற்குள் இருந்தபடியே உலகைப் பார்த்து பழகிய மனிதர்களுக்கு, பயணம் இந்த வட்டத்தை விலக்கி, உலகம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பாருங்கள் என்று கண்முன்னே காட்டுகிறது,
அந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொன்னால் புரியாது, வாழ்ந்து அனுபவிக்க வேண்டும், அப்படியான அனுபவத்தைத் தேடிச் சென்ற கிராமவாசிகளை, அவர்களின் விசித்திரமான மன இயல்புகளை அழகாக இப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது. வங்காள கிராமவாசிகள் ஒரு இந்தியப் பயணம் துவங்கியதே தனிக்கதை, 1969ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ரயில்வே துறையின் உயர் அலுவலகம் ஒன்றிற்கு வந்த ஸ்ரீமதி சென் என்ற வயதானபெண், தான் இன்னும் இரண்டு மாதங்களில் நோயில் இறந்து போக இருப்பதாகவும் அதற்குள் தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உலக அனுபவத்தைப் பெற வேண்டும் என்பற்காக, தனது சொத்து முழுவதையும் செலவு செய்து, அவர்களை ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு முறை பார்த்து வரசெய்ய விரும்புவதாகக் கூறினார்
ரயில்வே அதிகாரி இது முட்டாள்தனமான காரியம் என்பது போல பார்த்தபடியே இந்தியாவை ஏன் அவர்கள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு ஸ்ரீமதி சென் பதில் சொன்னார். என்னுடைய கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வெளியுலகமே தெரியாது, அவர்கள் கல்கத்தாவைக் கூட பார்த்தது கிடையாது, உள்ளுரிலே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து இறந்து போய்விடுகிறார்கள், இந்தியா எவ்வளவு பெரியது, எவ்வளவு கிராமங்கள், நகரங்கள் இருக்கின்றன, யார் நம்மை ஆள்கிறார்கள், எங்கிருந்து ஆள்கிறார்கள், நாட்டின் தலைநகர் எப்படியிருக்கும், பிரம்மாண்டமான மலைகள், நதிகள் எங்கேயிருக்கின்றன, மற்ற ஊர்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், விவசாயிகள் எப்படி விவசாயம் செய்கிறார்கள், சந்தை எப்படியிருக்கிறது, கோவில்கள் எவ்வாறு இருக்கின்றன, வேறுபட்ட உணவும், உடையும், பழக்க வழக்கங்களும் எப்படியிருக்கின்றன என்பதை எல்லாம் அவர்கள் நேரில் அனுபவித்து வர வேண்டும், இது தான் எனது நோக்கம், இந்தப் பயணத்தின் வழியே அவர்கள் இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும், அப்படி செய்தால் அதன்பிறகு கிராமம் மேம்படும், கூடவே அவர்களுக்குள் சண்டை சச்ரவுகள் வராது, அதற்காகவே இந்த ஏற்பாடினைச் செய்ய விரும்புகிறேன்
ரயிலில் மூன்றாம் வகுப்புப் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக ஒரு தனிப்பெட்டியை ஒதுக்கித் தர முடிந்தால் அதற்கான மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இது என்னுடைய நெடுநாளைய கனவு, இதை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும். ரயில்வே துறையின் அதிகாரி இந்த விசித்திரமான கோரிக்கையை தான் நிறைவேற்றி வைப்பதாகவும் அதற்கான பணத்தை கட்டும்படியாக சொல்லிவிட்டு, இவர்களை யார் வழிநடத்துவார்கள், யாராவது விபரங்களை எடுத்துச் சொல்லாவிட்டால் கிராம மக்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாதே என்று கேட்கிறார் .
அதற்கு ஸ்ரீமதி சென் கல்கத்தாவில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிஆசிரியர் இருக்கிறார், அவர் கிராமவாசிகளுடன் இணைந்து பயணம் செய்து இந்தியாவை அறிமுகம் செய்து வைப்பார் என்றார். அதன்படியே பயண ஏற்பாடு முடிவாகிறது, ஆனால் எதிர்பாராமல் ஸ்ரீமதி சென் இறந்து போய்விடுகிறார், அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற கிராமம் முன் வருகிறது.
ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு ரயில் பெட்டியில் ஏற்றிக் கொண்டு போக முடியாது என்பதால் நாற்பது பேர் பயணத்திற்காகத் தேர்வு செய்யப்படுகிறார்கள், அந்த நாற்பது பேருடன் ஒரு உள்ளுர் சமையல்காரன் சேர்த்துக் கொள்ளப்படுகிறார், காரணம் உள்ளுர் முறைப்படி ரயிலிலே சமைத்து சாப்பிடுவதாக இருந்தால் மட்டுமே பயணம் வர முடியும் என்று அத்தனை கிராமவாசிகளும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களுடன் ஒரளவு ஆங்கிலம் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர், மற்றும் வைத்தியம் அறிந்த பெண் ஆகியோரும் பயணம் செய்யத் துவங்குகிறார்கள்
பயணம் குறித்த கற்பனையும் பயமுமாக முதல் அத்தியாயம் துவங்குகிறது, அவர்களுக்கான மூன்றாம் வகுப்பு டிக்கெட் இருக்கிறது, அதை வாங்கிக் கொண்டு அவர்களாக கல்கத்தா போக வேண்டும், அங்கே தான் பள்ளி ஆசிரியர் அவர்களுடன் இணைந்து கொள்வார் என்று அறிவிக்கபடுகிறது, ரயில் டிக்கெட்டை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்வது என்பதில் குழப்பம் துவங்குகிறது, கல்கத்தாவில் போய் இறங்கி டிராமில் போனால் பள்ளி ஆசிரியரை சந்தித்துவிடலாம், ஹௌரா பாலத்தில் நடந்து போனால் அவர்கள் வழிதப்பிவிடுவார்கள் என்று ஆலோசனை சொல்கிறார் ரயில்வே ஊழியர்
எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடப்பது தான் எங்கள் வழக்கம், டிராம்கிராம் எல்லாம் வேண்டாம் என்று கிராம மக்கள் கல்கத்தா போய் இறங்குகிறார்கள், நகரம் ஒரே குப்பையும் தூசியுமாக உள்ளது. அதைக்கண்ட ஒரு பெண், சே, கையில் விளக்குமாறைக் கொண்டுவரமால் போய்விட்டேனே, இல்லாவிட்டால் தெருவைச் சுத்தம் செய்திருக்கலாமே என்று ஆதங்கப்படுகிறார், ஏன் இந்த ஊரில் அசுத்தங்களைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறார்களே என்று திகைப்பாக இருக்கிறது,
அதைவிட சாலையோர நடைபாதைகளில் குடியிருப்பவர்களைக் கண்டு ஏன் இவர்களுக்கு வீடு இல்லை என்று விசாரிக்கிறார்கள், நடைபாதை தான் வீடு என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்கள் நகரம் என்பதை முதன்முறையாக எதிர்கொள்கிறார்கள், அதன் நெருக்கடி, பரபரப்பு, பணம் மதிப்பிலாமல் போகும் விதம், மனித உறவுகள் அந்நியப்பட்டு போனதை கண் கூடாகக் காண்கிறார்கள், ஆனால் இவை எல்லாம் தாண்டி மனிதர்கள் நேசமிக்கவர்கள் என்றே கிராமவாசிகள் நினைக்கிறார்கள், பரிவோடு நடந்து கொள்கிறார்கள். ரயில்வே துறை அவர்களை மந்தைகளைப் போல மரியாதையின்றி நடத்துகிறது, பலரும் ,இப்பயணம் காசிற்குப் பிடித்த தெண்டம், வீண்வேலை என்று கேலி செய்கிறார்கள், கிராமவாசிகள் அந்தக் கேலியைப் பொருட்படுத்துவதேயில்லை,
ஆசிரியர் அவர்களுடன் இணைந்து கொள்கிறார், இந்தியப்பயணம் துவங்குகிறது, குழந்தையைத் தொட்டிலில் போட்டு தாலாட்டுவதை போல ரயில் தங்களை தாலாட்டுகிறது என்று ஒரு கிராமத்துப்பெண் மிகவும் ரசித்து அனுபவிக்கிறார், இன்னொருவருக்கோ ரயில்வேகம் பயமுறுத்துவதாக உள்ளது, உள்ளுர் சமையல்காரனை கொண்டு சமைத்த உணவை சாப்பிட்டு அவர்கள் கோழித்தூக்கம் தூங்குகிறார்கள். பயணத்தின் போது ஒரு இடத்தில் தங்கள் வழிகாட்டியிடம் சுற்றுலா பயணி என்பது யார் என ஒரு கிராமவாசி கேட்கிறார்,
அதற்கு கையில் பணம் வைத்துக் கொண்டு பொழுது போக்குவதற்காக ஊர் ஊராகச் சுற்றியலைபவரே சுற்றுலா பயணி எனப் பதில் சொல்கிறார் வழிகாட்டி, பணத்தை ஊர் சுற்றுவதற்காகவே சம்பாதிக்கின்ற ஆள்கள் இருக்கிறார்களா என்று வியப்போடு கேட்கிறார் கிராமவாசி, ஆமாம் நிறைய வெளிநாட்டவர்கள் இப்படி சுற்றுலா வருவார்கள் என்று சொல்கிறார். சுற்றுலா பயணிகள் என்ன செய்வார்கள் என்று கிராமவாசி கேட்டதற்கு, தனக்குப் பிடித்தமானதை புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள் என்று வழிகாட்டி பதில் சொல்கிறார்,
புகைப்படம் எடுப்பதன் வழியே ஒன்றை எப்படிப் புரிந்து கொள்ள முடியும், அதற்காக ஒருவன் இவ்வளவு தூரம் பயணம் செய்வது முட்டாள்தனமாகயில்லையா என்று கேட்கிறார் இன்னொரு கிராமவாசி, இப்படி பயணம் அவர்களின் மனதில் நிறையக் கேள்விகளை உருவாக்குகிறது, அதற்கான பதிலை நிறைய நேரங்களில் அவர்கள் அனுபவித்து அறிந்து கொள்கிறார்கள், புத்தகமெங்குமுள்ள அவர்களின் கேள்விகள் மிக முக்கியமானவை,
இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டார்கள் என்று வழிகாட்டி கூறும்போது ஒரு கிராமவாசி இந்தியர்களை விட அதிக வெள்ளைகாரர்கள் இந்தியாவில் இருந்தார்களா என்று சந்தேகத்துடன் கேட்கிறார், இல்லை பத்து சதவீதம் கூட கிடையாது என்று வழிகாட்டி சொல்கிறார், நம்மை விட எண்ணிக்கையில் குறைவானவர்கள் நம்மை ஆண்டது எப்படி, ஏன் மக்கள் அதை அனுமதித்தார்கள் என்று குழப்பத்துடன் கேட்கிறார் விவசாயி, அது போலவே தன் குடும்பத்தை இங்கிலாந்து விட்டுவிட்டு ஏன் வெள்ளைகாரன் இந்தியா வந்தான், மந்திரிகள் மற்றும் பதவியில் இருப்பவர்கள் ஏன் சாமான்ய மக்களை சந்திப்பதேயில்லை என்று கிராமவாசிகள் கேட்கிறார்கள்,
பயணம் இந்தியாவின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் அவர்களுக்கு ஒருங்கே புரிய வைக்கிறது, கண்முன்னே காணும் இந்தியா ஒரு விசித்திரம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள், வங்காளியான நாம் தான் இந்தியாவில் உயர்வானர்கள் என்றிருந்தோம், அதற்கு வெளியே இவ்வளவு மக்கள் உயர்வாகவும் அமைதியாகவும் வாழ்கிறார்கள், என்றால் வங்காளிகள் தங்களைப் பெருமை பேசிக் கொண்டது வெறும் சுயதம்பட்டம் தானா என்று கிராமவாசி கேட்பது, பயணம் அவரை மாற்றியிருப்பதன் அடையாளமாகவே உள்ளது,
பாதி பயணத்திற்குள் சமையல்காரன் போய்விடுகிறான், வெளிஉணவை ஏற்றுக்கொள்ள மறுத்து பட்டினி கிடக்கிறார்கள், முடிவில் வங்காளச் சமையல் அறிந்த பெண்மணியைத் தேடிப்பிடித்து மாற்று ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் வேறுவழியில்லை என்ற நிலை உருவான போது அவர்களின் உணவுப் பழக்கம் மாற ஆரம்பிக்கிறது, பழகிய சாப்பாடு பயணத்தின் போது ஒரு மனிதனை எவ்வளவு படுத்தி எடுக்கும் என்பதை அழகாக விவரித்திருக்கிறார்கள்,
அது போலவே பயணத்தில் நோய்மையுறுவது, திடீரென ஒருவருக்கு குளிரில் அவதிப்பட்டு நுரையீரலில் சுவாச அழற்றி உருவாகிறது, நிறையப் பேருக்கு கைகால் வலி உருவாகிறது, வயிற்றுஉபாதைகள் ஏற்படுகின்றன, இதற்காக உடனடி மருத்துவ சிகிட்சை தேவைப்படுகிறது, அதற்காக மருத்துவரைத் தேடியலைகிறார்கள், இந்த நிலையில் பயணத்தை முடித்துவிடலாமா என்ற யோசனை கூட எழுகிறது, ஆனால் பயணம் எக்காரணம் கெர்ண்டும் தடைப்படக்கூடாது என்று மருந்து சாப்பிட்டபடியே பயணம் மேற்கொள்கிறார்கள்
ரயிலில் ஸ்ரீமதிசென்னின் புகைப்படத்திற்கு தினமும் பூ போட்டு வணங்குகிறார்கள், கட்டுப்பெட்டியாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த பெண்களின் இயல்பு பயணத்தில் உருமாறுகிறது, தங்களுக்குள் இருந்த பேதம் கரைந்து போய் தாங்கள் அனைவரும் ஒரே ஊர் என்பதை அவர்கள் உணர்கிறார்கள், கோவில்கள், கலைநிகழ்ச்சிகள், வரலாற்றுபுகழ்மிக்க இடங்கள், வயல் வெளிகள், தங்களை போன்ற விவசாய கிராமங்கள், சிறியதும் பெரியதுமான நகரங்கள் என்று முடிவில்லாமல் சுற்றிய இவர்கள் கொச்சி வழியாக கன்யாகுமரிக்கு வருகிறார்கள், அங்கிருந்து மதுரை, மகாபலிபுரம் என்று சுற்றி ஒரிசா போய்விடுகிறார்கள்
தங்களது கிராமத்தில் இருந்து கிளம்பிய போது இருந்த அவர்களின் உலக அறிவு மெல்ல விரிந்து தங்களைத் தானே வழிநடத்திக் கொள்கிறார்கள், நெருக்கடிகளை எதிர்கொண்டு தானே சமாளித்து மீள்கிறார்கள், சகலருக்கும் அன்பைப் பகிர்ந்து தருகிறார்கள், இந்தியாவின் நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் எழுச்சிவீழ்ச்சியையும் அறிந்து கொள்ளும் போது தங்களின் வாழ்க்கை என்பது வானில் ஒளிர்ந்து மறையும் சிறிய வெளிச்சம் மட்டுமே என்பதை புரிந்து கொள்கிறார்கள்,
பயணம் அவர்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிக்கிறது, நிறையப் பாடங்களை கற்றுத்தருகிறது, ரயிலை அவர்கள் நேசிக்கிறார்கள். சொந்த வீடு போல உணர ஆரம்பிக்கிறார்கள். ரயில் வெறும் வாகனம் இல்லை, அது இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு நீள்கரம், கிராமவாசிகள் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதன் வழியே புழுதிக்காற்றும் வெக்கையும் தாகமுமாக இந்தியாவை அதன் உண்மையான ரூபத்தில் கண்டடைகிறார்கள், அது ஒரு மகத்தான தரிசனம், வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நிகழ்வு,
இந்தியாவினை முழுமையாகக் காண்பதற்கு ஒருவனுக்கு அவனது வாழ்நாள் போதாது, இந்தியாவில் வாழ்பவர்கள் ஒருமுறையாவது அத்தனை முக்கிய நதிகளையும் கண்டுவிட வேண்டும், நதி வழி தான் நகரங்களும் இருக்கின்றன, ஆகவே நதிகளையும் நகரங்களையும் இணைத்தே பயணம் மேற்கொள்ளலாம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பௌத்தம், சமணம், சீக்கியம் சார்ந்த முக்கிய இடங்கள், புகழ்பெற்ற கோவில்கள், புனிதர்களின் இடங்கள், அடர்ந்த வனங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், தேயிலை காபி தோட்டங்கள், கோதுமை வயல்கள், மலைநகரங்கள், கானுயிர் வசிப்பிடங்கள், மிகப்பெரிய ஏரிகள், ஆறுகள், பாலைநிலம், சிறியதும் பெரியதுமான நகரங்கள், இசை, நடனம், ஒவியம், சிற்பக்கலை சார்ந்த மையங்கள், பிரசித்திபெற்ற கல்விநிலையங்கள், அறிவுத்துறை சார்ந்த ஆய்விடங்கள், இயற்கையோடு இணைந்த கிராமங்கள், என்று சுற்றிக்காண்பதற்கு இந்தியாவில் எவ்வளவோ இருக்கின்றன, அதில் பாதியை ஒருவனால் காணமுடிந்தால் அவன் பாக்கியவான், பயணம் முழுவதும் கிராமவாசிகள் அவர்கள் உடைகளுக்காகவும், எளிய தோற்றத்திற்காகவும் பிச்சைகாரர்கள் என்றே படித்தவர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை, உண்மையில் பயணம் நமது அடையாளத்தை உதறச்செய்துவிடுகிறது, நம்மை வெறுப்பவனைக் கூட நேசிக்க செய்யும் மனதை தந்துவிடுகிறது, பயணியாக இருப்பது ஒரு சுகம், அபூர்வநிலை,
சாதாரணக் கூலி வேலை செய்யும் ஒரு வெள்ளைகாரன் இந்தியாவிற்கு பயணியாக வரும்போது அவனுக்கு நாம் கொடுக்கும் மரியாதையை. இங்குள்ள கிராமவாசிகள் பயணம் செய்யும் நாம் தருவதேயில்லை, ஏன் இந்த வேறுபாடு, அலட்சியம். அவமதிப்பும், எதிர்பாராமையும், கைவிடப்படலும் பயணத்தின் இணைபிரியாத தோழமைகள், அதைத் தவிர்த்து ஒருவனால் பயணம் மேற்கொள்ளவே முடியாது. இந்த நூலில் கிராமவாசிகள் இந்தியாவைச் சுற்றிபார்த்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பும் அத்தியாயம் மிகுந்த உணர்ச்சிமயமாக விவரிக்கபட்டுள்ளது
முற்றிலும் மனம் மாறியவர்களாக கிராமவாசிகள் நடந்து கொள்கிறார்கள், உலகம் கற்றுத்தந்த பாடத்தை தனது கிராமத்தில் உடனே நடைமுறைப் படுத்துகிறார்கள். ஸ்ரீமதிசென்னின் கனவு நனவாகிறது, இந்த நூலெங்கும் ஆதாரக்குரல்போல ஒலிப்பது மனிதநம்பிக்கை குறித்த ஹீதர் வுட்டின் கருத்துகளே, ஹீதர் வுட் சொல்கிறார் ,மனிதனின் உண்மையான சந்தோஷம் என்பது குடும்ப விசேசமோ, அல்லது நிறைய சம்பாதிப்பதோ இல்லை, அந்த மகிழ்ச்சிகள் தற்காலிகமானவை, கடந்து போய்விடக்கூடியவை, உண்மையான சந்தோஷம், எதிர்வரும் தலைமுறையான நமது பிள்ளைகள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுமாறு செய்வதே, அதை நாமே உருவாக்க வேண்டும்
சகல கஷ்டங்களையும் கடந்து வாழ்க்கை இனிமையானது என்று அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், அப்படியான முன்மாதிரி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டினால் மட்டுமே நம்முடைய பிள்ளைகள் அதைக் கடைப்பிடிப்பார்கள், ஆகவே நம்பிக்கை தான் மனிதனின் ஆதாரசக்தி, அதை உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். நகரம் மனிதர்களின் பேராசையால் நிரம்பியிருக்கிறது, கிராமமோ புறக்கணிக்கபட்ட நிலையில் கூட உறுதியான நம்பிக்கையைத் தன் பக்கம் வைத்திருக்கிறது, ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள், கிராமத்தின் அழியாத நம்பிக்கைகள் கைவிடப்பட்டால் இந்தியாவிற்கு எதிர்காலமே இருக்காது
திறந்த மனதுடன், எளிமையுடன், நேசத்துடன், பேராசையும் வன்முறையும் இன்றி, அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து தர வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை, அந்தக் கடமைக்கு நம்மைத் தயார் செய்வதற்கே இது போன்ற பயணங்கள் தேவைப்படுகிறது. ஹீதர் வுட்டின் இந்த எளிய வாசகங்கள் உண்மையானவை, இந்தியாவை ஒருமுறைச் சுற்றிவந்தவன் அதன்பிறகு வாழ்வின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவனாகவே இருப்பான், நிலம் கற்றுத்தரும் பாடம் மகத்தானது, ஒரு போதும் மறக்கமுடியாதது. அலைந்து பாருங்கள் இந்தியா எவ்வளவு பெரியது, வளமையானது, உறுதியானது, என்பது புரியும்.