I personally feel that the younger generation not only should know science, but they also should know about poems and poets. The following article is a short biography of a Palestine poet Mehmood Darvees. I acknowledge the unknown author with due respect.
கவிஞர் மஹ்முத் தர்வீஸ்-பாலஸ்தீனியர்களால் தேசியக்கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்."நாங்கள், பாலஸ்தீனர்கள் ஒரேயொரு கருப்பொருளுக்காக எம்மை நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம். பாலஸ்தீனத்தை நாம் விடுதலை செய்ய வேண்டும். இன்று நாம் இருப்பது ஒரு சிறை. நாங்கள் மனிதர்கள். நாங்கள் காதல் புரிகிறோம். நாங்கள் சாவைக் கண்டு அஞ்சுகிறோம். வசந்தத்தின் முதல் பூப்பில் நாம் சந்தோசம் கொள்கிறோம். இவைகளை வெளியிடும் பொருட்டு, இதற்கு மாறாக எம்மீது திணிக்கப்படும் கருப்பொருட்களை நாம் எதிர்க்கிறோம். எனது தாயகம் விடுதலை அடைவதற்கு முன்பாக எனது தனிப்பட்ட விடுதலை என்பது சாத்தியமில்லை. எனது தாயகம் அரசியல் சுதந்திரமடைந்த பின்பு, நான் அதனைச் சபிக்கவும் செய்வேன். எனது சுதந்திரத்தை நான் அப்போதே முழுமையாகவும் அடைவேன்." என்று பகிரங்கமாக பிரகடனம் செய்த பாலஸ்தீனியர்களால் தேசியக்கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த கவிஞர் மஹ்முத் தர்வீஸ் ஆகஸ்ட், 9, 2008 அன்று தீவிர இதய சிகிச்சைக்குப் பிறகு இறந்துபோனார்.
67-வயதான அவரது வாழ்க்கைப் போராட்டங்கள் நிகழ்கால பாலஸ்தீன வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாதது. அவர் ஒரு கவிஞராக, செயல்வீரராக, இயக்கப் போராளியாக இருந்தவர். இந்த நூற்றாண்டின் ஒரு கலைஞன், அறிவுஜீவி எப்படி ஒரு போராட்ட உந்துசக்தியாக மாறுகிறான் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இறுதிவரை பாலஸ்தீன விடுதலை, அமைதியான வாழ்வு, இழந்த தனது நிலம்-பற்றிய கனவுகளை கவிதைகளாக மொழிமாற்றம் செய்துகொண்டிருந்தவர். அரபி பேசும் நாடுகளில் சாதரண டாக்சி டிரைவர் முதல் அறிவுஜீவிகள் மற்றும் அரசக் குடும்பங்கள்வரை அறிமுகமானவர். 'அரபுநாடுகளின் தெருக்களில் எல்லோருக்கும் என்னைத் தெரிகிறது, எனது தனிப்பட்ட வாழ்வில் இது ஒரு சுமையாக உள்ளது. எல்லோரும் என்னை நோக்கி வந்து விடுவதால் நான் ”கேஃப்“-களுக்குக்கூட போவதில்லை.' எனக்கூறும் தர்வீஷ் 'நான் நிழலிலேயே வாழத் தயாராக உள்ளேன், வெளிச்சங்களில் அல்ல.' என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இறுதிவரை தனது நிலம் குறித்த நினைவுகளின் நிழலிலேயே வாழ்ந்து மடிந்தும் விட்டார்.
பாலஸ்தீனத்தின் அல்-பிர்வா என்கிற கிராமத்தில் மார்ச் 13, 1942-ல் பிறந்த தர்வீஷின் பெற்றோர்கள் பாலஸ்தீன அரபியர்கள். இஸ்லாமிய சன்னி பிரிவைச் சேர்ந்த நடுத்தர வர்க்க விவசாயிகள். 1948-ல் பிரித்தானிய அரசால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்கிற புதிய நாடால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தனது சொந்த கிராமத்திலிருந்து லெபனானுக்கு துரத்தப்பட்டார்கள். தனது 8-வது வயதிலேயே நாட்டைவிட்டு துரத்தப்பட்ட தர்வீஷ், இறுதிவரை ஒரு அகதி என்கிற உணர்விலேயே புலம்பெயர்ந்து வாழும் நிலைக்கு ஆளானார். தனது நேர்காணல் ஒன்றில் தான் துரத்தப்பட்ட அந்த நாளை நினைவுக் கூறுகிறார் 'அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். என் பெற்றோர்கள் என்னை எழுப்பினார்கள். அவர்கள் மிகவும் மிரட்சியடைந்து காணப்பட்டார்கள். நாங்கள் காட்டுவழியாக பயணித்தோம். என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த இரவின் நிலவை என்னால் என்றுமே மறக்கமுடியாது. அது ஒரு முழுநிலவு, அதன் வெளிச்சம் மலைகள் மற்றும் சமவெளிகளின் பாதைகளை எங்களக்கு காட்டியபடி இருந்தது. வீடு திரும்பி விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் எல்லாவற்றையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தோம்.' இப்படி ஒரு அகதியாக விரட்டப்பட்ட அவர், ஓராண்டிற்குபின் தனது கிராமத்திற்கு திரும்பியபோது, அந்த கிராமம் முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்ததை பார்க்கிறார். தனது தாய்நிலம், மற்றும் தனது வசிப்பிடம் பற்றிய இந்த ஆழ்மன பாதிப்பும், இழப்புணர்வும் அவரது கவிதையின் மிக முக்கிய ஆளுமையாக மாறுகிறது. கடைசிவரை தகர்க்கப்பட்ட அந்த நிலமும், அவரது கிராமத்தில் அவர் விளையாடிய ஆலிவ் மரங்களும், கோதுமை வயல்களும், மரங்களும், அவரது அப்பாவியான தாயும் முக்கியமானதொரு ஆழ்மனப் படிமங்களாக மாறுகின்றன. இந்த படிமங்கள் ஒரு ஏக்கமாக, இழப்புணர்வாக மாறிமாறி வருகிறது அவரது கவிதைகளில்.
சிறுவயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கியவர். சக யூத மாணவர்களிடமிருந்து தான் பிரிக்கப்பட்டதை கண்டு அவ்வுணர்வை கவிதைகளாக்கினார். 1960-ல் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரான தர்வீஷ், தனது தீவிரமான கவிதை இயக்கத்தால் இளமைக் காலத்தில் 3 ஆண்டுகள் சட்டரீதியான காரணமின்றியே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 1970-ல் ரஷ்யாவிற்கு படிப்பிற்காக பயணமானார். ஓராண்டு மாஸ்கோவில் பயின்றபின், எகிப்து தலைநகரான கெய்ரோவிற்கு பயணமானார். எகிப்திலிருந்து வெளிவந்த அல்-அகரம் பத்திரிக்கையில் பணிபுரிந்தார். 26-ஆண்டுகள் புலம்பெயர்ந்தவராக பெய்ரூத்திலும் பாரிஸிலும் வாழ்ந்து வந்தார். இவை இரண்டும் தனது வாழ்நாளில் அதிகம் அவர் வசித்த நகரங்கள் ஆகும்.
அவரது கவிதைகளின் இந்த இரண்டு நகரங்களும் ஒரு காட்சிப்புலனில் விரியும் வெளிகளாக திரும்ப திரும்ப வந்து கொண்டிருப்பதைக் காணலாம். அரபு நவீனத்துவத்தின் தலைநகர் என்று பெய்ரூத் அவரால் வர்ணிக்கப்பட்டது. இங்குதான் அவர் உலகக்கவிஞர்களை, ஜனநாயகவாதிகளை சந்தித்தார். லெபனானியக் கவிஞரான காலி ஹாவி மற்றும் பாகிஸ்தான் கவிஞரான பைஸ்-அகமத்-பைஸ் போன்றவர்களை சந்தித்தார்.
1996-ல் பாலஸ்தீன மேற்குக்கரையில் உள்ள ரமல்லா நகருக்கு, தனது சொந்த மண்ணிற்கே ஒரு அகதியாக திரும்பினார். ”நாடுகடத்தல் புவியியல் கருத்தாக்கத்தை விட மேலதிகமான விஷயம். உங்கள் தாய்நாட்டில், உங்கள் சொந்த வீட்டில், உங்கள் அறையில் நீங்கள் ஒரு நாடுகடத்தப்பட்டவராக இருக்கமுடியும்.” எனக்கூறும் தர்வீஷ் நாடுகடத்தப்படுதல் என்பது இருப்பிடத்தின் அல்லது நிலம் என்கிற புவியியல் பரப்புகளுடன் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு இருத்தலுக்கான போராட்டம் என்பதை உணர்ந்திருந்தார். அது தனது உள்ளார்ந்த இருப்பின் ஒரு பகுதி என்கிறார். அது ஒரு உளவியல் சிக்கல் நிறைந்த நிலை. சொந்த வீட்டிலேக்கூட நாடுகடத்தப்பட்ட ஒரு அகதிபோல வாழமுடிந்த ஒரு உணர்வு. அது ஒரு அடையாளம். அந்த அடையாளமும், உணர்வும்தான் பாலஸ்தீன மக்களின் அடிப்படை பிரச்சனையாக மாறியது. மேலும் கூறுகிறார் “நாடுகடத்தப்படுதல் அல்லது அகதி என்பது ஒரு பல்கலாச்சாரத்தன்மை வாய்ந்தது. அது ஒரு சாதாரண பாலஸ்தீனியப் பிரச்சனை மட்டுமல்ல, அதுதான் இலக்கியத்தின் கருப்பொருளாக உள்ளது.” என்கிறார். நாடுவிட்டு புலம்பெயர்தல் ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியதையே இங்கு அவர் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இந்த நூற்றாண்டின் மிகமுக்கிய அவலமாகவும், ஒரு பேசுபொருளாகவும் மாறிய ஒரு வாழ்நிலைதான் அகதி வாழ்வு என்பது. இந்த அகதி வாழ்வின் தன்னடையாளம்காணும் செயல்தான் நாடற்றவர்களாக மாற்றப்பட்டவர்களது இலக்கியத்தின் முக்கியக் கருப்பொருளாக உள்ளது. அதாவது, அகதியாக்கப்பட்ட ஒருவருக்கு இலக்கியம் என்பது ஒரு வாழ்தலுக்கான வெளி. அது சாதரணமான ஒரு இலக்கியவாதிக்கு தரும் படைப்பூக்கம் என்கிற மகிழ்வுணர்வை மட்டும் தருவதில்லை. தனது நிலத்தில் வாழ்வதான அனுபவத்தை தருகிறது. அது ஒரு கற்பிதமான புவிப்பரப்பாக மாறுகிறது. அத்தகைய ஒரு புவிப்பரப்பில் விளைந்த ஒரு கவிதை நிலமாகவே அவரது கவிதைகள் உள்ளன.
இன்று ஈழத்திலும், அன்று போஷ்னியாவிலும், ருவாண்டாவிலும், ஆப்கானிலும் இன்னும் எண்ணற்ற நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் பிரச்சனை இது. ஒரு நாட்டை இன்னொரு நாடு, ஒரு இனத்தை மற்றொரு இனம், ஒரு மதத்தை மற்றொரு மதம் ஆக்ரமித்தவுடன் உருவாக்கப்படும் ஒரு அடையாளச் சிக்கல்தான் அகதி என்பது. இது பாலஸ்தீனத்திற்கு உரிய ஒரு குறிப்பான பிரச்சனை அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டதில்தான் அவரது விரிந்த பார்வைப் புலமும் மனிதநேயமும் வெளிப்படுகிறது. இறுதியில் இப்படிக் கேட்கிறார் ”அகதியாக வாழவே என்னை நான் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன் எனக்கூறலாமா? இருக்கலாம்.” ஆம் அகதியாக வாழ்தல் என்பது பழக்கமாக ஒரு உடலின் அடிமைக்குரிய நிகழ்வாக மாற்றப்படுகிறது என்பதையே அவர் இங்கு சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம். அதாவது அகதி என்பது ஒரு உடலரசியல் கட்டமைப்பாக, உடலின் ஒரு வாழ்நிலையாக மாறுகிறது. இவ்வாறாக, இரண்டாந்தர குடிமக்களாக மாற்றப்பட்டப்பின் அகதியாகி நாட்டைவிட்டு வெளியேறும் இந்த தன்னடையாளச் சிக்கல் என்பதுதான் தர்வீஷின் மையமயான கவிதைப்புலம் எனலாம்.
1964-ல் தனது 22வது வயதில் முதல் கவிதை தொகுப்பான 'ஆலிவ் இலைகள்' எனகிற நூலை வெளியிட்டார். அவரது 30-க்கும் மேற்பட்ட கவிதைகளும், கட்டுரைகளும் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வண்ணத்தப் பூச்சியின் சுமை (The Butterfly's Burden (2006)), துரதிஷ்டவசமாக, இது ஒரு சுவர்க்கம் - தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (Unfortunately, It Was Paradise: Selected Poems (2003)), முற்றுகை (Stage of Siege (2002)), ஆதாமின் இரண்டு ஏதேன்கள் (The Adam of Two Edens (2001)), முரால் (Mural (2000)), அந்நியனின் படுக்கை (Bed of the Stranger (1999)), சங்கீதம் (Psalms (1995)), ஏன் இந்த குதிரையை தனிமையில் விட்டுவிட்டீர்கள் (Why Did You Leave the Horse Alone? (1994)), மற்றும் மனித மாமிசத்தின் இசை (The Music of Human Flesh (1980)) உள்ளிட்ட 30 கவிதை தொகுதிகளும், பாரிசில் வெளியிடப்பட்ட மறத்தலுக்கான நினைவுகள் (Memory of Forgetfullness (1986)) உள்ளிட்ட 8 கட்டுரை நூல்களும் அவரது படைப்பிலக்கிய பங்களிப்புகள் ஆகும்.
இஸ்ரேலிய அரசுப்படையால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான பாலஸ்தீனமும், அதன் மக்களும், தீவிரமாக தங்களது நிலத்தை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பாலஸ்தீனியப் பிரச்சனை என்பது ஒரு இனப்போராட்டமாக மாறியது. அதன்பின், கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறிய அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்தார். 1971-ல் கெய்ரோவில் பாலஸ்தீனிய தேசியக் கவுனசிலில் பேச அழைக்கப்பட்டபோது முதன்முதலாக பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தை சந்திக்கிறார். அராபத் அவரை அரவணைத்துக் கொண்டே 'நான் உங்களிடம் தாயகத்தின் நறுமணத்தை உணர்கிறேன்' என்று கூறியதை நினைவு கூறும் தர்வீஷ் பெய்ரூத்தில் சிறந்த நண்பர்களாக நாங்கள் இருவரும் இருந்தோம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் பாலஸ்தீன ஆட்சியதிகாரத்தில் அராபத் அதிபராக அமர்ந்தபோது பண்பாட்டுத் துறை அமைச்சராக தர்வீஷை பதவி ஏற்றுக்கொள்ள அழைத்தார். ஆனால், தர்வீஷ் அதனை மறுத்துவிட்டார். ஆட்சியதிகாரத்துடன் அவரது உறவு என்பது விமர்சனப்பூர்வமாகவே இருந்து வந்துள்ளதற்கு இது ஒரு சான்றாகும்.
1987-ல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கான அறிக்கையை எழுதிய அவர், பாலஸ்தீன மக்களின் விடுதலையை அதில் பிரகடனப்படுத்தினார். பாலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற இருநாட்டுக் கொள்கையை அங்கீகரித்த தர்வீஷ் அதனை பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏற்கும்படி செய்ததில் பெரும் பங்காற்றினார். 1993-ல் போடப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவ்வியக்கத்தைவிட்டு வெளியேறினார். 1997-வரை அல்-காமல் என்கிற இலக்கிய இதழினை ஆரம்பித்து அதன் தலைமை ஆசிரியப் பொறுப்பில் பணியாற்றினார். இவ்விதழ் அரேபிய கவிதைகளின் மறுஉயிர்ப்பாகவும், அரேபிய இலக்கியத்தை மீட்டெடுத்த ஒரு முக்கிய நிகழ்வாகவும் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.
தர்வீஷ் "பாலஸ்தீன மக்களின் மூச்சுக்காற்றாக செயல்பட்டவர், புலம்பெயர்தல் மற்றும் இருத்தலுக்கான நிகழ்கால சாட்சியாக இருந்தவர்." என்கிறார் கவிஞரான நவாமி சிகாப் நை. உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் தர்வீஸ் தனது படைப்புகளுக்கான எண்ணற்ற பரிசுகளைப் பெற்றுள்ளார். அவிசேனா (இபுன்-சினா) விருது, லெனின் அமைதி விருது, ஆப்ரோ - ஆசிய எழுத்தாளர் கழகத்தின் தாமரை விருது, பிராங்கின் கலைக்காவலர் விருது, பெல்லஸ் லெட்டர்ஸ் மெடல், லென்னன் பவுண்டேஷனின் கலாச்சார விடுதலைக்கான விருது, மொராக்கோவின் மன்னரான நான்காம் முகம்மதுவால் அளிக்கப்பட்ட மொராக்கோ விசாம் என்கிற கெளவர விருது, ரஷ்யாவின் ஸ்டாலின் விருது ஆகிய விருதுகளைப் பெற்றதன்மூலம் பாலஸ்தீனப் பிரச்சனையை உலகக் கவனத்திற்கு கொண்டு வந்தவர். மிகப்பெரிய விருதான அமேரிக்க லென்னன் பவுண்டேஷன் விருதைப்பெற்றபோது அவர் அமேரிக்காவிற்கு இதன் மூலம் எனது தாயகத்தின் பிரச்சனை அறிமுகமாகட்டும் என்றார்.
அரபியக் கவிஞரான அப்து அல்-வஹாப் அல்-பையாதி மற்றும் ஈரானிய மார்க்சியரும் பின்னாளில் ஈரானிய தேசியக் கருத்தியலுக்கு ஆட்பட்ட ஒரு முக்கியமான அரபிய முன்னொடிக் கவிஞரான பதுர் ஷாக்கிர் அல்-சய்யாப் ஆகிய கவிஞர்களின் பாதிப்புகளில் கவிதை எழுதியவர். ரிம்பார்ட் மற்றும் கின்ஸ்பர்க் போன்ற உலக இலக்கிய ஆளுமைகளால் பாதிக்கப்பட்டவர். ஹீப்ரு கவிஞரான யெக்தா அமிச்சியின் கவி ஆளுமைக்கு ஆட்பட்ட இவர், 'அவர் எனக்கு ஒரு சவால், ஏனென்றால் நாங்கள் ஒரே நிலம் குறித்தே எழுதுகிறோம். அவர் தனது நலத்தின் அடிப்படையில், எனது சிதைக்கப்பட்ட அடையாளத்தின் மேல் நின்றுகொண்டு, நிலத்தையும் அதன் வரலாற்றையும் பற்றி எழுதுகிறார். எனவே, இந்த நிலத்திற்கும் அதன் மொழிக்கும் யார் உரிமையாளர்கள்? யார் அதை அதிகம் காதலிப்பவர்கள்? யார் அதைப்பற்றி நன்றாக எழுதுகிறார்கள்? என்கிற போட்டி எங்களுக்குள் உள்ளது." என்கிறார் தார்விஷ். இந்த கண்ணோட்டத்திலிருந்துதான் அவரது கவிதைப் புலத்தின் அடிப்படையான படைப்பு மனம் விகசிப்பதை உணரலாம். அவரிடம் கவிதைகள் தனது தாய்நிலத்தை பிரதியாக்கும் உத்தியாக மாற்றம் பெருவதை உணரலாம்.
யூத ஜியோனிசம் முற்றிலுமாக நிலம் மற்றும் வரலாற்றின் நினைவுகளிலிருந்து அழிக்க நினைத்த பாலஸ்தீனம் என்கிற ஒரு நிலப்பரப்பை அதன் வரலாற்று நினைவை தனது கவிதைகளில் மீட்டெடுத்து நாளைய யூத தலைமுறை, ஒரு மக்களற்ற நிலத்தில் புதிதாக குடியேறிவர்கள் அல்ல எண்ணற்ற மக்களைக் கொண்று மற்றொருவரின் நிலத்தில்தான் தங்களது நாடு உருவாகி உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அவரது கவிதைகள் சிலவற்றை இஸ்ரேலிய அரசுப்பாடத்திட்டத்தில் இணைக்க முயன்று அது அரசின் நிர்பந்தத்தால் கைவிடப்பட்டபோது, தர்வீஷ் கூறிய வார்த்தைகள் 'இஸ்ரேலியர்கள் இந்த நிலத்திற்கும் ஒரு அரபிக் கவிஞனுக்கும் இடையிலான காதலை அவர்களது மாணவர்களுக்கு கற்றுத்தர விரும்பவில்லை. இது மற்றொரு மக்கள் வேரோடிய நிலம் என்கிற முழுக்கதையையும் மாணவர்கள் புரிந்துகொண்டு “உணர்ச்சிகரமான“ ஜியோனிசம் என்பது ஒரு பொய் என்பதை கண்டுபிடித்துவிடக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.“ என்பதுதான். அவரது கவிதைகள் ஹீப்ருமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது என்பதுடன் இஸ்ரேலியர்களிடம் பரவலாக அறியப்பட்ட ஒரு அரபிக் கவிஞரும்கூட.
தர்வீஷின் கவிதைகள் இரண்'டு அடிப்படைகளின்மேல் கட்டப்பட்டவையே. ஒன்று பாலஸ்தீனத்தின் வரலாறு மற்றொன்று பாலஸ்தீனத்தின் புவிபரப்பு. பாலஸ்தீன வரலாற்றை தனது கவிதை வழியாக பிரதியாக்கமாக மீட்டெடுப்பதும், பாலஸ்தீன நிலத்தை அதாவது புவிப்பரப்பை தனது மொழிக்குள் கட்டமைப்பதுமே இவரது கவிதைகள். அதாவது, மொழிக்குள் தனது வரலாற்றையும், தனது நிலப்பரப்பையும் பிரதியாக்கமாக முன்வைத்தவை அவரது கவிதைகள். அதனால்தான் என்னை, எனது கட்டிடங்களை, எனது இயற்கையை அழிக்கலாம் ஆனால், எனது கவிதைகளின் ஒரு வார்த்தையைக் கூட அழிக்க முடியாது என்று எழுதினார். இந்த உலகில் மொழிகள் வாழும்வரை எனது கவிதைகள் வாழும். அந்த கவிதைகளில் பாலஸ்தீனம் என்கிற நிலமும், அதன் வரலாறும் வாழும் என்றார். இந்த தன்னுணர்வுடன் படைக்கப்பட்ட அவரது கவிதைகள் ஜியோனிச அதிகாரத்தின் நில அழிப்பிற்கும், வரலாற்றிற்கும் எதிரான குரலாக ஒலித்தது.
'என்னால் எனது யதார்த்தத்தை தேர்ந்துகொள்ள இயலவில்லை. இதுதான் பாலஸ்தீன இலக்கியத்தின் முக்கியமான பிரச்சனை, வரலாற்றின் இயக்கத்திலிருந்து எங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை" என்கிறார் தர்விஷ். அவரால் தனது வரலாற்றை, நிலத்தின் பூகோளவியலைத் தாண்டி செல்லமுடியாததாக, அதனையே தனது கவிப்புலமாக கொண்டு இயங்குவதான ஒரு நிர்பந்தத்தை வரலாறு அவரிடம் திணித்தது. இறுதிவரையில் அவரிடம் மிஞ்சியிருந்த ஒரு கேள்வி 'தான் யார்?' என்பதுதான். அவரது கவிதை இயக்கம் ஒரு கூட்டுக் குரலாகவே ஒழித்தது. தனது சொந்த அனுபவங்களை, காதலைப்பாடும்போதுக்கூட அதனை பாலஸ்தீன நிலம் மீதான காதலாக உணரும் ஒரு வாசிப்பே நிகழ்த்தப்பட்டது. “எனது கவிதையில் வரும் பெண் வெறும் பெண்தான், கவிதையில் வரும் தாய் எனது தாய்தான், கவிதையில் வரும் கடல் வெறும் கடல்தான்“ என்று அவர் வலியுறுத்தி சொல்ல வேண்டியவராக இருந்தார். ஏனென்றால் அவரது ஒவ்வொரு சொல்லும் பாலஸ்தீனத்தின் கூட்டுக்குரலாக அதன் மனசாட்சியாக உணரப்பட்டது. ஒரு கட்டத்தில் தன்னுருவாக்க வினையாக வெறும் காதல் கவிதைகளை மட்டுமே எழுதும் நிலைக்கு அவருக்குள் இச்சிக்கல் இருப்பதை காணமுடிகிறது. பாலஸ்தீனம் என்பது ஒரு உருவகமாக அவரது கவிதைக்குள் வந்தபோதிலும், கவித்துவ ஆளுமை என்பதை கடைசிவரை தனது கவிதைக்கான அடிப்படை இயக்கமாக கொண்டிருந்தார். தனது கவிதைக்குள் பாலஸ்தீன் வரலாற்றுடன் அதன் நிலத்துடன் உறவுகொண்ட தொன்மங்களை கதையாடல்களை முன்வைத்துப் பேசியதன்மூலம் அவ்வரலாற்று நினைவை மறுஉருவாக்கம் செய்தபடியே இருந்தார்.
பாலஸ்தீன் விடுதலை என்கிற தீராத தாகத்துடன் ஆக்ரமிப்பிற்கு எதிராக போராடிய அவர் பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சனை என்பது இரண்டு வரலாற்று நினைவுகளுக்கு இடையிலான போராட்டம் என்பதை புரிந்து கொண்டிருந்தார். அவரது கவிதைகள் தனது மண் சார்ந்த வரலாற்று நினைவை மீட்டுபவையாக இருந்தன. அதனால்தான் இஸ்ரேலியக் கவிஞரான யெக்தா அமிச்சின் கவிதைகளில் உருவமைக்கப்பட்ட நிலத்திற்கு எதிராக தனது நிலத்தை கவிதைக்குள் உருவமைக்க முயன்றார். பாலஸ்தீனப் பிரச்சினையின் அடிப்படையே வரலாறாகச் சொல்லப்பட்ட நினைவுகளின் அடிப்படைதான். 'இல்லம் என்பது நினைவுகளின் இடம்தான்' என்று கூறும் தர்வீஷ், 'நினைவுகள் இல்லாமல் ஒரு இடத்துடன் எப்படி உறவு கொள்ளமுடியும்“ என்கிறார். மேலும், 'யாராலும் ஒரே ஆற்றை இருமுறைக் கடக்கமுடியாது. ஒருவேளை நான் திரும்பினாலும் எனது குழந்தைப் பருவத்தை எப்படி அடையமுடியும்? அதனால் திரும்புதல் என்பது சாத்தியமேயில்லை, ஏனென்றால் வரலாறு நகர்ந்துகொண்டே உள்ளது. திரும்புதல் என்பது நினைவில் உள்ள இடத்திற்கு செல்வதோ அல்லது இடத்தில் உள்ள நினைவிற்கு செல்வதோதான்' என்கிறார். அழிவிற்குள்ளான இடம் என்பது நினைவாக மட்டுமே எஞ்சியுள்ளது என்பதால் பாலஸ்தீனம் என்கிற நிலம் ஒரு கவித்துவ-உருவகமாக அவரது கவிதைக்குள் மாறுகிறது. திரும்பவும் தனது நிலத்திற்கு செல்லுதல் என்பது ஒருவகையில் நினைவிற்குள் பயணிப்பதுதான் என்பதையும் நிலமும், நினைவும் வேறுவேறு அல்ல என்பதுதான் அவரது கவிதையின் அசாத்திய ஆளுமை எனலாம்.
ஹெராக்ளிடிசின் புகழ்பெற்ற கூற்றான "யாராலும் ஒரே ஆற்றை இருமுறைக் கடக்க முடியாது." என்கிற வாசகத்தை அவர் முன்வைப்பதிலிருந்து வரலாற்றின் இயக்கப்போக்கில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாது என்பதையும் அந்த மாற்றத்தை ஏற்பது வரலாற்றின் நிர்பந்தம் என்பதையும் சொல்வதாகிறது. ஆறு ஓடிக்கொண்டிருப்பதைப்போல அதைக் கடப்பவனும் மாறிக்கொண்டிருக்கிறான். அதனால்தான் திரும்புதல் என்பது ஒரு புதிய நிகழ்வாக உள்ளதால் அதனை திரும்புதலாக சொல்லமுடியாது என்கிறார். நினைவுகள்தான் ஒரு வரலாற்றை கட்டியமைக்கிறது என்பதால் வரலாறு என்பதே நினைவுகளின் வரிசைத்தொடர்தான் என்பதை நுட்பமாக இக்கூற்று முன்வைப்பதை உணரலாம்.
பாலஸ்தீன வரலாறு என்பது எப்படி நினைவுகளின் கதையாடலாக கட்டப்பட்டது என்பதை புரிந்து கொள்வது இந்த நினைவுகளின் போராட்டம் என்கிற சொல்லாடலை புரிந்துகொள்ள ஏதுவாகும். பாலஸ்தீனத்தின் பூர்வக்குடிகள் அரேபியர்களே. பழைய ஏற்பாட்டின் தொன்மக் கதையாடல்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யூதர்களின் குடியேற்றம் அங்கு நிகழ்ந்தது. அவர்களது இறைவனான யஹோவாவிற்கும், அவர்களது இறைத்தூதரான மோசஸிற்கும் இடையில் எற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட நிலமே இஸ்ரேல் என்கிற மதம்சார்ந்த கதையாடலே இதற்கான அடிப்படையாகும். இறைவனால் ரட்சிக்கப்பட்டதாகவும், அவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனிதநிலமாகவும் வர்ணிக்கப்பட்ட அந்த மண் பற்றிய இந்த வரலாற்று நினைவும், தங்களது நிலத்தில் வந்து குடியேறியவர்கள் இவர்கள் என்கிற பூர்வீகம் பற்றிய பாலஸ்தீனிய அரேபியர்கள் நினைவும் மோதும் ஒரு போராட்டமே பாலஸ்தீனியப் போராட்டத்தின் அடிப்படை உளவியல் உந்து சக்தியாகும்.
யூதர்களால் எந்த பிற இனத்தையும் ஏற்க இயலாத அவர்களது தூய, புனித, கடவுளின் தேர்ந்தெடுப்பு கதையாடலும், அதனால் உருவான உயர்ந்தவர்கள் என்கிற மனப்போக்கும், தங்களது தனித்தன்மை பற்றிய அதீத உணர்வும் யூதர்களை எந்த நாட்டு மக்களிடமும் ஒருங்கிணைந்து செயல்படமுடியாத நிலையை உருவாக்கியதை வரலாற்றில் படிக்கமுடிகிறது. பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் வளரமுடியாத மதமான யூதமதம், அதாவது பிற மதத்தினரை உள்ளிழுக்கும் அல்லது மதம்மாறும் தன்மையற்றது, உலக வாழ்வில் தனித்து விடப்பட்டதாக மாறிப்போனது. இத்தனிமையால் மற்ற மதங்களால் ஒடுக்குமுறைக்கும் அழிவிற்கும் உள்ளான அவர்கள், தங்களது மதத்தை காக்க கல்விக் கற்றுத் தேர்வதை ஒரு அடிப்படை கடமையாகக் கொண்டு தங்களை அறிவாற்றல் மிக்க மதத்தினராகவும், ஒற்றுமையுள்ள ஒரு இனமாகவும் வளர்த்துக் கொண்டனர். இவ்வாறு, தங்களது அறிவாலும், வட்டி மூலதனத்தாலும் வளர்ந்த அம்மதம் எல்லா ஐரோப்பிய நாட்டு அரசுகளிடமும், ஐரோப்பிய மக்களிடமும் ஒருவித அச்சத்தையும், அம்மக்களை கீழ்மையாக உணரவைக்கும் ஒரு மனநிலையையும் கட்டமைத்தது.
கிறித்தவர்களுக்கும், கிறித்தவ ஐரோப்பியர்களுக்கும் அவர்களால் ஏற்பட்ட பொருளியல் மற்றும் உளவியல் நெருக்கடிகளும், கிறித்தவத்திற்கு எதிரான அவர்களது நிலைபாடுகளும், ஏசுவை கொன்ற இனத்தவர் என்பதான கருத்தாக்கமும், அவர்களது அறிவு மேலாண்மையின் வழியாக எல்லோரையும் ஆள்வதற்கான உயர்மனப்பான்மையும், ஐரோப்பியாவிற்கு ஏற்படுத்திய தீராத்தலைவலியாக மாறிப்போனபோது, அவர்களை ஐரோப்பியாவிலிருந்து வெளியேற்றுவதன்மூலம் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டு தன்னை அமைதி பூமியாக மாற்றிக் கொள்ளும் ஒரு அரசியல் நிலையே இஸ்ரேலை உருவாக்க காரணம் எனலாம். மற்றொரு காரணம் அரபிப் பழங்குடிகளின் ஆட்சியையும், அதன் எண்ணெய் வளத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் நோக்கம். அதாவது, அரேபிய சமூகங்களைக் கட்டுப்படுத்த ஒரு அடியாளைப்போல இஸ்ரேல் அரசை உருவாக்கின ஆங்கிலோ - அமேரிக்க அரசும் அதிகார வர்க்கமும். இதற்கு அவர்களது மத நம்பிக்கைகளும் முக்கியக் காரணமாக மாறியது. ஆக, யூதர்களின் புனிதபூமி என்கிற கருத்தின் அல்லது நினைவின் அடிப்படையில் உருவான ஒரு தேசமே இஸ்ரேல். இந்த நினைவிற்கும், பூர்வீக பாலஸ்தீன அரேபியர்களின் நினைவிற்கும் இடையிலான ஒரு போராட்டமே பாலஸ்தீனப் போராட்டம் என்பதை உணர்ந்த ஒரு மதச்சார்பற்ற கவிஞராக தர்வீஷ் விளங்கினார். அரபிய நாடுகளின் ஜனநாயகமற்றத் தன்மை மற்றும் அவற்றின் ஒற்றுமையின்மை போன்றவையே பாலஸ்தீனப் பிரச்சனை தீராதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஓரிடத்தில் கூறும் தர்வீஷ் மதங்களை மீறிய ஒரு மனிதநேயமிக்க ஜனநாயகவாதியாக இருந்தார். தர்வீஷின் கவிதைகள் அந்த வகையில் தனது வரலாற்றை மதச்சார்பற்ற முறையில் பிரதிக்குள் உருவமைப்பதன் வழியாக, தனத நிலத்தை வரைந்து வைப்பதாக மாறியது. பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு துகளும் அவரது கவிதைக்குள் மொழியாக தடம் மாற்றி பதியவைக்கப்ட்டது.
1983-ஈழப் போராட்டத்திற்குப் பிறகான தமிழ் இலக்கியச் சூழலில் அறியப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான ஆப்பிரிக்க லத்தீன் அமேரிக்க மற்றும் அரேபிய கவிதைகளினூடாக பரவலாக மொழி்பெயர்க்கப்பட்டு அறியப்பட்டவர் கவிஞர் தர்விஷ். இவரது கவிதைகள் பாலஸ்தீனம் மட்டுமின்றி உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் தாய்நிலங்கள் அபகரிக்கப்பட்டு அகதிகளாக ஆக்கப்பட்ட மக்களின் உரத்த குரலாக ஒலித்தவை. ஆகவே, இவரது கவிதைகள் ஈழத் தமிழர்களின் நிலைக்கு நெருக்கமானதாகவும், உலக ஒடுக்கமுறைக்கு எதிரான குரலாகவும் அடையாளம் காணத்தக்கது.
22 வயதில் ஒரு இஸ்ரேலிய இரானுவத்தானால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட இவரது ”அடையாள அட்டை” என்கிற புகழ் பெற்ற கவிதை, அரபு உலகில் ஒரு மின்சார உணர்வைப் பாய்ச்சியதைப்போல பரவியது. அக் கவிதையில் உள்ள நிலம் பற்றிய சித்தரிப்பில் விளைநிலமாக தனது மூதாதைகளால் உருவாக்கப்பட்ட நிலம், தனது குழந்தைகளுடன் பயிரிடப்பட்டு காக்கப்பட்ட அந்த நிலம், தற்சமயம் அபகரிக்கப்படுகிறது. நிலம் அபகரிக்கப்பட்ட அவருக்கு தர மிஞ்சியிருப்பது வெறும் பாறைகள்தான். இங்கு நிலம் என்பதுடன் பிணைந்துள்ள வரலாறு என்பதே பிரச்சனையாக இருப்பது சொல்லப்படுகிறது. இங்குதான் நிலமற்றதான மனிதன் தன்னையே தனது உடற்பரப்பையே நிலமாக மாற்றி கண்ணிவெடியை தனக்குள் புதைத்துக் கொள்பவனாக மாறுகிறான். “மனித வெடிகுண்டுகளை நான் ஏற்பதில்லை ஆனால் ஏன் ஒருவன் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதை ஆராய வேண்டும்“ என்கிறார் ஓரிடத்தில் தர்வீஷ். மனித உடலே கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலமாக மாறுவதற்கு காரணம் அவனுக்கு மறுக்கப்பட்ட அவனது நிலத்தை தனது உடலாக பதலீடு செய்வதே. காரணங்களை தீர்க்காமல் காரியங்களை நோவதில் பலனில்லைதானே.
தர்வீஷின் மரணம் அபகரிக்கப்பட்ட அந்த நிலங்களை தனது கவிதை எனும் மொழிக்குள் உருவாக்கி இருத்தி வைக்கிறது. அவரது மொழி இருக்கும்வரை அவரது கவிதைகளின் ஒரு சொல் இருக்கும்வரை பாலஸ்தினம் இருக்கும் அதனை அழிக்க முடியாது என்பதுதான் அவரே தந்துவிட்டு மறைந்த வாக்குமூலம். அதிகாரத்தின் முன் உண்மை மட்டும் பேசிப் பயனில்லை உண்மையாக வாழ்ந்தும் காட்டவேண்டும் என்கிற பூஃக்கோவின் செய்தியை நினைவிற்கு கொண்டு வருகிறது இவரது மரணம்.
அவரே கூறியதுபோல கவிதை உலகை மாற்றிவிடாது என்றாலும் ஒரு போர்க்குணமிக்க மனிதனை அதுதான் உருவாக்குகிறது. தனது கவிதைகள் தன்னை மாற்றியது என்கிறார் தர்வீஸ். கவிதைகள்தான் அதாவது கலைதான் அவரை போராட்டக்காரனாக்கியது. அவரது கவிதை ஒன்றில் தன்னையே ஆயுதமாக ஒப்படைக்கும் அந்த போர்க்குணம் அளப்பறியது. தன்னை தனிமனிதனாக அல்லாமல் ஒரு கூட்டமாக தனது மக்களின் ஒரு கூட்டுத் தன்னிலையின் அடையாளமாக முன்வைத்தார். அபகரிக்கப்பட்ட நிலம் என்பது என்ன? என்கிற அடிப்படைக் கேள்வியுடன் துவங்கும் இவரது கவிதைகள் அடிப்படையில் நிலம் என்பது அதனுடன் பிணைக்கப்பட்ட வரலாற்று நினைவுதான் என்றும் அந்த நினைவுகளின் போராட்டமே பாலஸ்தீனப் பிரச்சனைக்கான போராட்டமாக உள்ளதையும் இவரது கவிதைகள் மெளனமாகவும், உரத்தும் சொல்லியபடி இருக்கின்றன.
1 comment:
use jump breaks to read it in new window
Post a Comment